search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வீட்டுமனை பட்டா"

    வேலுர் அருகே இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரி பல கட்ட போராட்டம் நடத்தியும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் தேர்தலை புறக்கணிப்பதாக ஆங்காங்கே போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

    வேலூர்:

    வேலூர் அடுத்த திருமலைக்கோடி விஸ்வநாதன் நகர், சரஸ்வதி நகர், அண்ணா நகரில் 50 ஆண்டுகளுக்கு மேலாக 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இலவச வீட்டு மனை பட்டா கேட்டு அப்பகுதி பொதுமக்கள் பலமுறை சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் மனு அளித்தனர்.

    அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

    இந்நிலையில் இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரி பல கட்ட போராட்டங்கள் நடத்தினர். இது வரை நடவடிக்கை எடுக்காததை கண்டித்து தேர்தலை புறக்கணிக்க போவதாக அப்பகுதி பொதுமக்கள் ஆங்காங்கே போஸ்டர்கள் ஒட்டி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இதுகுறித்து தகவலறிந்த வேலூர் தாசில்தார் ரமேஷ் பொதுமக்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர் தேர்தல் முடிந்து 4 மாதகாலத்தில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். 

    ஆண்டிப்பட்டியில் பட்டாவுக்கு தடையில்லா சான்றிதழ் வழங்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ. கைது செய்யப்பட்டார்.

    ஆண்டிப்பட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே முத்து கிருஷ்ணா புரத்தைச் சேர்ந்தவர் ரெங்கராஜன் கூலித் தொழிலாளி. இவர் ஆண்டிப்பட்டி அருகே சண்முகசுந்தரபுரத்தில் புதிதாக வீடு கட்டியுள்ளார். அந்த வீட்டுக்கு பட்டா கோரி விண்ணப்பித்திருந்தார்.

    சுமார் 800 சதுரடி அளவுள்ள வீட்டுக்கு பட்டா வழங்குவதற்கு தடையில்லா சான்றிதழ் கேட்டு ஆண்டிப்பட்டி திம்மரசநாயக்கனூர் வி.ஏ.ஓ. சுரேஷ்குமாரிடம் மனு அளித்துள்ளார். ஆனால் தடையில்லா சான்றிதழ் வழங்க சுரேஷ்குமார் ரூ.10 ஆயிரம் லஞ்சமாக கேட்டுள்ளார்.

    ரெங்கராஜன் லஞ்சம் கொடுக்க விரும்பாததால் தேனி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் செய்தார். இதனைத் தொடர்ந்து போலீசாரின் அறிவுரைப்படி ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை ரெங்கராஜன் வி.ஏ.ஓ. சுரேஷ் குமாரிடம் கொடுத்தார்.

    அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை துணை கண்காணிப்பாளர் சத்திய சீலன் தலைமையிலான போலீசார் அவர்களை சுற்றி வளைத்தனர். கையும் களவுமாக பிடிபட்ட வி.ஏ.ஓ. சுரேஷ்குமார், உதவியாளர் சின்ன பிச்சை ஆகியோரை கைது செய்தனர்.

    சென்னை - சேலம் இடையே பசுமை வழிச்சாலையால் வீடு இழந்த 16 பேருக்கு வீட்டுமனை பட்டா மற்றும் பசுமை வீடுகள் கட்டுவதற்கான ஆணைகளை மாவட்ட கலெக்டர் பொன்னையா வழங்கினார்.
    காஞ்சீபுரம்:

    சென்னை - சேலம் இடையே ரூ. 10 ஆயிரம் கோடி செலவில் 8 வழிச்சாலை அமைக்க திட்டமிட்டப்பட்டு உள்ளது. இந்த சாலை காஞ்சீபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி வழியாக சேலம் வரை 274 கிலோ மீட்டர் தூரம் செல்கிறது. இதற்காக 5 மாவட்டங்களிலும் நிலம் கையகப்படுத்தும் பணி விரைந்து நடந்து வருகிறது.

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் 8 வழி பசுமை வழிச்சாலைக் காக 59.100 கிலோ மீட் டர் நீளத்துக்கு சாலை அமைப் பதற்கு நிலம் கையகப்படுத்துவதற்கான அளவீடு முடிவடைந்துள்ளது.

    இந்த அளவீட்டின்படி 26 வீடுகள் கையகப்படுத்தப்பட உள்ளன. இவற்றில் வளையக் காரணை கிராமத்தில் கையகப்படுத்தப்பட உள்ள 7 வீடுகளில் 6 வீடுகளுக்கு ஏற்கனவே வீட்டுமனை பட்டா மற்றும் பசுமை வீடுகள் கட்டித்தருவதற்கான ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.

    இந்த நிலையில் பசுமை வழிச்சாலைக்காக வீடுகளை இழந்த உத்திரமேரூர் வட்டம், வெங்காரம் கிராமத் தைச் சேர்ந்த 9 பேருக்கும், மானாம்பதி கிராமத்தை சேர்ந்த 7 பேருக்கும் என மொத்தம் 16 பேருக்கு வீட்டு மனை பட்டா மற்றும் பசுமை வீடுகள் கட்டுவதற்கான ஆணைகளை மாவட்ட கலெக்டர் பொன்னையா வழங்கினார்.

    அப்போது கலெக்டர் பொன்னையா கூறும்போது, மீதமுள்ள 4 பேருக்கு அருகில் நிலம் இல்லாததால் நில எடுப்பு பிரிவின் மூலம் வேறு இடத்தல் நிலம் கையகப்படுத்தப்பட்டு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த 22 பேருக்கும் 3 மாதத்திற்குள் வீடு கட்டி முடிக்கப்பட்டு புதிய வீட்டில் குடியேறியபின் அவர்கள் வீடு கையகப்படுத்தப்படும்.

    உத்தேச மதிப்பீடு அடிப்படையில் தென்னை மரத்திற்கு ரூ. 40 ஆயிரம், மாமரத்திற்கு ரூ. 16 ஆயிரத்து 600, கொய்யா மரத்துக்கு ரூ. 10 ஆயிரத்து 20, தைல மரத்துக்கு ரூ. 2 ஆயிரத்து 500, தேக்கு மரம் வனத்துறை மூலம் அளவீடு செய்யப்பட்டு அவர்கள் மதிப்பீட்டின்படி இழப்பீடு வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் நூர் முகம்மது, தேசிய நெடுஞ்சாலை மாவட்ட வருவாய் அலுவலர் நர்மதா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயக்குமார், வருவாய் கோட்டாட்சியர் ராஜூ கலந்து கொண்டனர்.
    ×